திருச்சி மேல புலிவார்டு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, மணி உள்ளிட்ட சிலர் நடத்திய ஏலச்சீட்டு நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்து பணம் செலுத்து வந்துள்ளனர்.
மாதந்தோறும் சீட்டுத் தொகையை செலுத்திவந்த நிலையில் 2016ஆம் ஆண்டு இந்த சீட்டு முடிவடைந்ததாகத் தெரிகிறது. ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கு அதற்குரிய பணத்தை திருப்பித் தராமல் பழனிச்சாமியும், மணியும் இழுத்தடித்துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை நேரில் சென்று கேட்டும் உரிய பதில் இல்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சுமார் 200 பேர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் பழனிச்சாமி, மணி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புகார் அளித்த 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆணையர் லோகநாதனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், "விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேரிடம் 24 கோடி ரூபாய் வரை சீட்டு நடத்தி பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.
அவர்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 7 பேரையும் கைதுசெய்யாமல், புகார் அளித்த 3 பேரை கைதுசெய்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இது குறித்து மாநகர காவல்துறை ஆணையரிடம் முறையிட்டுள்ளோம். அவர் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அவர்களை கைதுசெய்யவில்லை என்றால் நாங்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.