ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் வினோத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில்,"கடந்த 2000ஆம் ஆண்டு பொழுதுபோக்கிற்காக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டு, தற்போது பணம் வைத்து விளையாடும் சூதாட்டமாக மாறிவிட்டது.
இந்த சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் இளம் வயதினர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலையும் செய்து கொள்வதால் தெலுங்கானா, ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, நாகலாந்து போன்ற மாநிலங்கள் ஆன்– லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது.
இந்த சூதாட்டத்தை தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்த மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் எந்த விதமான வரையறையையும் விதிக்கவில்லை.
நாட்டின் பொருளாதாரத்துக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஆன் லைன் ரம்மி சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.