மதுரை அலங்காநல்லூரை அடுத்த கொண்டையம்பட்டி கிராமத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் விதிமுறைகளை மீறி அரசு டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இயங்கிவருவதாக அறியமுடிகிறது. அந்த பகுதியை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 25 கிராமங்களில் மதுக்கடை இல்லாத நிலையில், அக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மதுப் பிரியர்கள், இளைஞர்கள் இங்கு வந்து மது அருந்துவதாக தெரிகிறது.
இதன் காரணமாக, பெண்கள் மற்றும் குழந்தைளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதேபோல, மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரால் சாலை விபத்து ஏற்படுகிறதென குற்றஞ்சாட்டப்படுகிறது.
அந்த வகையில், நேற்றிரவு (நவம்பர் 2) மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சசிகுமார், பாலமுருகன் ஆகிய இருவர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் டுபட்டனர்.
வாடிப்பட்டியிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் அமர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கொண்டையம்பட்டி அரசு டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சமயநல்லுர் டிஎஸ்பி ஆரோக்கிய ஆனந்த ராஜ், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.