சென்னையின் முன்னாள் மேயரான மறைந்த என்.சிவராஜின் 129ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், " சென்னை ராயப்பேட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டம் சிறப்பான வகையில் அமைந்திருந்தது. அங்கு வாக்குவாதங்கள் நடந்ததாக வெளியே சொல்லப்படுபவை எல்லாம் உண்மையல்ல.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் ஒருபோதும் பாதிப்படையாது. புதிய வேளாண் சட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன.
அந்தப் போராட்டங்களினால் விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் எந்த நலனும் ஏற்படப்போவதில்லை" என அவர் தெரிவித்தார்.