தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டை போராட்ட பூமியாக வைத்திருக்க ஸ்டாலின் தொடர்ந்து பொய் பரப்புரை!' - ADMK Vs DMK

சென்னை : தமிழ்நாட்டை போராட்ட பூமியாக வைத்திருக்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய் பரப்புரை செய்துவருகிறார் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை போராட்ட பூமியாம வைத்திருக்க ஸ்டாலின் நினைக்கிறார் - ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாட்டை போராட்ட பூமியாம வைத்திருக்க ஸ்டாலின் நினைக்கிறார் - ஆர்.பி.உதயகுமார்

By

Published : Sep 23, 2020, 6:11 PM IST

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பு முகாம்களின் பணிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று நேரில் ஆய்வுசெய்தார்.

அந்நிகழ்வின் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த தூய்மைப் பணியாளர்களுக்குச் சால்வை மரியாதை செய்து அவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சென்னையில் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாள்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

இதுவரை ஐந்தரை லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்திருந்தாலும், குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகப் பயணம் செய்வதாகப் புகார்கள் வருகின்றன.

எனவே, படிப்படியாகப் பேருந்துகள் இயக்கம் அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இன்று பிரதமருடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டுவருகின்றன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்துகளைப் பகிர்வார்.

மருத்துவக்குழு உள்ளிட்ட குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் ஊரடங்கு விலக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இனி ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இல்லை.

விவசாயிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு முதலமைச்சர் நேற்றே உரிய விளக்கத்தை அளித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இதனால் பாதகம் ஏற்படாது.

அதேபோல, அனைத்து விவசாயிகளும் உண்மை நிலை அறியவேண்டுமென சட்ட முன்வடிவுகளை விளக்கமாகக் கூறி தமிழ்நாடு அரசு அறிக்கை அளித்துள்ளது.

திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து தமிழ்நாட்டைப் போராட்டக்களமாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார்.

இப்போது அவருக்கு வேளாண் சட்ட முன்வடிவுகள் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து மக்களிடம் பொய் பரப்புரை செய்துவருகின்றார். ஆனால், இது மக்களிடத்தில் எடுபடாது.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழுக் கூட்டம் நடந்ததோ அதேபோன்று தற்போதும் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்நிலையில் அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது" என்றார்.

'ஊரெங்கும் ஒரே பேச்சு; 2021ஆம் ஆண்டிலும் ஜெயலலிதாவின் ஆட்சிதான்' எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details