தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2020, 5:07 PM IST

ETV Bharat / state

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியுறும் மாணவர்கள்!

சென்னை: புதிதாகத் தொடங்கப்பட்ட 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியதென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியுறும் மாணவர்கள் !
அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியுறும் மாணவர்கள் !

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் “ஏமாற்று ராஜ்ஜியத்தில்” அறிவிப்பு என்றாலே - அது வீணாகும் வெற்று அறிவிப்புதான் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள இந்த அரசுக் கல்லூரிகளில், பெண்களுக்காக உள்ள இரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் அடக்கம்.

ஏறக்குறைய இரண்டாயித்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வித் துறையின் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டு - வகுப்புப் பாடங்களை ஆன்லைன் மூலம் கற்க வாய்ப்பு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துத் துறைகளிலும் கோட்டைவிட்டுள்ள அதிமுக அரசு - கல்வித் துறையையும் கோட்டைவிட்டு - அங்கும் சீரழிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போகத் துடிப்பது புரிகிறது.

“கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் மாதத்தில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும்” என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அதற்கு முன்பு உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளே நடக்கவில்லை என்றால் - பாடமே நடத்தாமல் எப்படி ஒரு மாணவர் உள் மதிப்பீட்டுத் தேர்வை எழுத முடியும்? அந்த மதிப்பெண் இல்லாமல் எப்படி பருவத் தேர்வினை அவர் எதிர்கொள்வார்? புதிய கல்லூரிகள் ஆரம்பித்து - அடிப்படை வசதிகளை இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து இப்படியொரு அவலத்தை எடப்பாடி அரசு ஏன் உருவாக்க வேண்டும்?

மாணவர்களின் எதிர்காலக் கல்வியை ஏன் அதிமுக அரசு கலைத்துச் சீர்குலைக்க வேண்டும்? புதிய கல்லூரிகள் அறிவிப்பு மட்டுமல்ல - புதிய மாவட்டங்கள் அறிவிப்பும் அதிமுக ஆட்சியில் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது - அரைவேக்காட்டுத்தனமாகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதற்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை.

ஆகவே, இனியும் தாமதிக்க வேண்டாம்! புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்கள் ஆகிய பணிகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு - பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குத் தாமதமின்றி ஆன்லைன் வகுப்புகளை நடத்திட வேண்டும் என்றும், அவர்கள் வெற்றிகரமாகப் பருவத் தேர்வினை எழுதுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களின் கல்வியில் விபரீத விளையாட்டுகளை அதிமுக அரசு நடத்திட முயற்சிக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details