தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்னை குறித்த எம்.பி. சு.வெங்கடேசன் கேள்விக்கு அமைச்சர் பதில்! - நாடாளுமன்றம் கூட்டத் தொடர்

மதுரை: வீட்டு வசதிக் கடன் வட்டி பிரச்னை குறித்து மத்திய அரசு கைவிரித்துள்ளதா என கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.

Mp
Mp

By

Published : Sep 21, 2020, 5:02 AM IST

வீட்டு வசதிக் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் போது தானாக பிடித்தங்களை அதிகரிப்பதும், வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் போது சேவைக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டுமென்ற நடைமுறையால் பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாடிக்கையாளர்கள் இழக்கிறார்கள் என சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த மத்திய நிதி இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், " ரிசர்வ் வங்கி, வீட்டு வசதிக் கடன் வட்டி விகிதங்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கி கொண்டு விட்டதால் அரசோ, ரிசர்வ் வங்கியோ இந்நிறுவனங்கள் நிர்ணயிக்கிற வட்டி விகிதங்களில் தலையிட இயலாது. கடன் நிதிக்கு ஆகிற செலவினம், கடன் இடர்கள், கடனாளிகளின் செலுத்தும் திறன் ஆகியனவற்றை கணக்கிற் கொண்டு கடன் விலை தீர்மானிக்கப்படுகிறது.

வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வட்டி குறித்த நிர்ணயங்களை செய்வது மேற்கூறிய அம்சங்களுக்கு எதிரானது மட்டுமின்றி, இடரை ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களுக்கு மாற்றுவதாகும். வட்டி விகிதங்களை சம்பந்தப்பட்ட வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் இயக்குநரவைகள் முடிவெடுக்கின்றன. வட்டி விகித மறு சீரமைப்புக்கான சேவைக் கட்டணங்கள் பற்றியெல்லாம் நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்குமான ஒப்பந்தத்தில் இடம்பெறுகின்றன. இதுகுறித்த வெளிப்படைத் தன்மையோடு எந்தெந்த சேவைகளுக்கு, வட்டி மறு சீரமைப்பு உட்பட, எவ்வளவு கட்டணம் என்பதை பகிரங்கமாக வீட்டு வசதிக் கடன் நிறுவனங்கள் அறிவிப்பது பாரபட்சம் அற்றதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் பதில் குறித்து கருத்து தெரிவித்த சு.வெங்கடேசன் "அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. மிகப் பெரும் நிறுவனங்களையும், அப்பாவி வாடிக்கையாளர்களையும் ஒரே தட்டில் வைப்பது என்ன நீதி? மக்களை பெரு நிறுவனங்களின் தர்க்கமற்ற நடைமுறைகளில் இருந்து காப்பாற்றுவது அரசின் கடமை அல்லவா? வலுத்தவரையும், இளைத்தவரையும் சமமாக கருதுவேனென்று சொல்வது அரசாங்கத்திற்கு அழகா?

நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாக உள்ள தேசத்தில் அரசாங்கத்தின் அக்கறை யார் பக்கம் இருக்க வேண்டும்? லட்சக்கணக்கான ரூபாய்களை சாதாரண மக்கள் இழக்கிறார்களே என்ற இரக்கம் வேண்டாமா? வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, நிறுவனம் வாடிக்கையாளரிடம் பேசாமல் தானாக உயர்த்திக் கொள்ளலாம்; ஆனால் வட்டி விகிதங்கள் குறையும் போது வாடிக்கையாளர் சேவைக் கட்டணம் சில ஆயிரம் செலுத்தி விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்பது பாரபட்சம் இல்லையா? அந்த சேவைக் கட்டணத்திற்கு அரசாங்கம் பல நூறு ரூபாய்கள் ஜிஎஸ்டியையும் வாடிக்கையாளரிடம் இருந்தே வசூலித்துக் கொள்ளும் என்பது அநீதியின் உச்சம் இல்லையா? இதையெல்லாம் அரசு மௌனமாக வேடிக்கை பார்க்கும் என்பதை ஏற்க இயலாது. இயற்கை நீதிக்கு முரணான இந்த அணுகுமுறையை மாற்ற தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details