குன்னூரில் யானைகள் குடிக்கும் ஆற்று நீர் பரிசோதனை! - Elephant habitat drinking water
நீலகிரி: குன்னூரில் யானைகள் பருகும் ஆற்று நீரில் கழிவுகள் கலப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுகளால், அந்நீர் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வருகின்றன. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை ஓர வனப்பகுதியில் முகாமிடும் இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி சாலையைக் கடந்து வருகிறது.
அப்படியாக ரன்னிமேடு ரயில் பாதையோர ஆற்றில் தண்ணீரை யானைகள் குடித்துச் செல்கின்றன. குன்னூர் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாததால் கழிவுகள் அனைத்தும் ஓடையில் கலந்து, பின்னர் ஆற்றில் கலக்கிறது. இந்தக் கழிவு கலந்த நீரை யானைகள் குடிப்பதால் நோய்ப் பரவும் அபாயம் உள்ளது.
இது தொடர்பாக வனத்துறை, வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், நீலகிரி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன், ரேஞ்சர் சசிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். குன்னூரில் ஐந்து இடங்களில் ஆற்று நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள கழிவுகள், ஓடைகளிலும் ஆற்று நீரிலும் கலக்கும் இடங்களில் உள்ள மக்களிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் ரன்னிமேடு பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து தண்ணீரை குடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், "இங்கு சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் கோவை, சேலத்தில் உள்ள ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படும். இவற்றின் விவரங்கள் இன்னும் 15 நாட்களில் தெரியவரும். முதற்கட்டமாக இங்கு விசாரணை நடத்தி அறிக்கைகள் அலுவலர்களுக்கு அனுப்பப்படும்" என்றனர்.