அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று (செப். 28) நடைபெற்றது.
அஇஅதிமுக அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகத்தை எளிமையாக்க மாவட்ட ரீதியாகப் பிரிப்பது, வழிகாட்டும் குழு அமைப்பது, வரவிருக்கும் தேர்தலில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவது, சசிகலா விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முதலமைச்சர் பதவி தொடர்பாக செயற்குழுவில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பேசிய ஓபிஎஸ், "2021ஆம் ஆண்டு வரை மட்டுமே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை நான் ஏற்றுக்கொள்வதாகக் கூறியே ஒன்றாக இணைந்து செயல்பட்டுவருகிறேன். தற்போதைய அரசுக்கு மட்டுமே துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக்கொண்டேன். என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா. மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை. சசிகலாதான் முதலமைச்சராக்கினார்" எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறப்பான ஆட்சி செய்துவருவதாக பிரதமரே பாராட்டியுள்ளார். என்னை மட்டுமல்ல உங்களையும் சசிகலாதான் முதலமைச்சராக்கினார். யார்? யாரை முதலமைச்சராக்கினார் என்பது தற்போது முக்கியம் இல்லை. நல்லாட்சி கொடுத்துவருவது யார் என்பதுதான் முக்கியம்" என்றார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான காரசார விவாதத்தை தொடர்ந்து வரும் 7ஆம் தேதி அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவுசெய்து அறிவிக்கப்படும் எனத் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.