வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் 'ஜார்தான் கொல்லை' எனும் மலைக்கிராமம் உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, மருத்துவம், கல்வி போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று(நவ.05) அம்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியினர், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் அணைக்கட்டுத் தொகுதி செயலாளர் கண்ணன் கூறுகையில், "இப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், அவசர காலங்களில் டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் நோயாளிகளை தூக்கிச் செல்கிறோம்.
ஒரு ஆண்டிற்கு முன்பு கர்ப்பிணி ஒருவரை, அவசர நிலையில் இது போன்று தூக்கிச் சென்றதால், காலதாமதம் ஏற்பட்டுச் செல்லும் வழியிலேயே தாய் சேய் இருவரும் உயிரிழந்தனர். இத்தகைய நிலையில் வாழ்ந்து வரும் மலைகிராம மக்களுக்கு தேவையான உதவிகளை, வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்துதர வேண்டும்" என வலியுறுத்தினார்.