கரூர் மாவட்டத்தை அடுத்துள்ள வெங்கமேடு எல்.ஜி.பி. நகர், சாய்பாபா கோயில் அருகே சீமை கருவேல மரங்கள் நிறைந்து காட்டுப் பகுதி ஒன்றுள்ளது.
அதில் இன்று மாலை திடீரென எதிர்பாராத வகையில் தீப்பிடித்தது. தீப்புகை பரவியதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கருவேலம் மரமடர்ந்த அந்த பகுதி முற்றிலும் பற்றிக்கொண்டது.
இதனையடுத்து, அப்பகுதியில் மக்கள் பணியில் ஈடுபட்டும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் எம்.ஆர்.வி. அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தங்களது நீர் ஊற்றும் லாரியை கொண்டுவந்து தீயணைக்கும் பணியில் இறங்கினர்.
ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்த எம்.ஆர்.வி. அறக்கட்டளை நண்பர்களை பொதுமக்கள் பாராட்டினார்.
எம்.ஆர்.வி. அறக்கட்டளையானது, கரூர் மக்களுக்கு நற்பணியாற்ற தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரால் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் பல நற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.