ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடா என்னும் வனகிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு பவானிசாகரிலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 25 கிலோ மீட்டர் கரடுமுரடான பாதைகளில் பயணித்து பின்னர் வனப்பகுதியில் ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து செல்ல வேண்டும்.
மழைக்காலங்களில் மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்படுவதால் இக்கிராம மக்கள் மாயாற்றை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுவந்தனர். இந்நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர் சுகுணா மனோகரன், ஊர் பொதுமக்கள் இணைந்து ஆற்றின் குறுக்கே தற்காலிக நடைபாலம் அமைக்கத் திட்டமிட்டனர்.
தற்போது, ஆற்றில் குறைந்தளவே நீர் ஓடுவதால், ஆற்றின் குறுக்கே கற்களை அடுக்கியும் தண்ணீர் செல்வதற்கு சிமெண்ட் பைப்புகளை அமைத்தும் தற்காலிக பாலத்தை உருவாக்கியுள்ளனர். இனி பரிசல் இயக்குவர்களை எதிர்பார்க்காமல் கிராம மக்கள் இந்தத் தற்காலிக பாலம் வழியாக நடந்துசென்று எளிதாக தெங்குமரஹாடாவை அடைய முடியும்.