தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எடப்பாடியின் அதிகாரம் காவல் துறையின் கைக்குப் போனதா?" - மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம் காவல் துறையினரின் கைக்குப் போனதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

MK Stalin tweet slams TN Police
MK Stalin tweet slams TN Police

By

Published : Jun 24, 2020, 11:29 PM IST

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

ஊரடங்குக் காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் அதிமுக ஆட்சியாளர்கள் அலட்சியமாகவும் - ஆணவத்துடனும் - சுயலாப உள்நோக்கத்துடனும் செயல்பட்டுவந்தாலும், உயிர்காக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், இரவு பகல் பாராமல் சாலைகளில் நின்று, ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் காவல் துறையினரும், பொதுமக்களின் வணக்கத்திற்கும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

அனைத்துத் தரப்பினரும் இவர்களின் பணித் திறனைப் பெரிதும் மதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லில் பதர் போல, நீரில் நுரை போல, பூவில் புல்லிதழ் போல, காவல் துறையில் உள்ள சில அலுவலர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாக இருப்பதுடன், மக்களின் உயிரைப் பறிக்கும் காட்டுத் தர்பாராகவும் மாறியிருக்கிறது.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. ஜெயராஜ் என்ற 60 வயது மூத்த குடிமகனும், அவரது மகனான 31 வயது பென்னிக்ஸ் என்ற இளைஞரும், காவல் விசாரணையில் (கஸ்டடி) கடுமையாகத் தாக்கப்பட்டு, அதன் காரணமாக அப்பா, மகன் இருவரும் உயிரிழந்துள்ள கொடூரம், தமிழ்நாட்டில் உள்ள அனைவருடைய நெஞ்சத்தையும் உறைய வைத்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில், செல்போன் கடையைத் திறந்திருப்பது குறித்து, காவல் உதவி ஆய்வாளருக்கும் கடையில் இருந்த ஜெயராஜ் அவர்களுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தினை மனதில் வைத்து, பழிவாங்கும் நோக்குடன், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சொல்ல முடியாத அளவுக்கு, கொடூரமான முறையிலே சித்ரவதைகள் செய்து, அதன்பின் நீதித்துறை நடுவர் முன் நேர்நிறுத்தி, தொலைதூரத்தில் உள்ள கோவில்பட்டி சிறைச்சாலைக்குக் கொண்டு சென்று அடைத்துள்ளனர்.

அங்கு, தந்தையும் மகனும் உடல்நலன் பாதிக்கப்பட்டு, அடுத்தடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்திருப்பது பதற வைக்கிறது.

நேரக் கட்டுப்பாட்டை மீறி கடையைத் திறந்திருந்தால், வழக்குப்பதிவு செய்யலாம். சீல் வைக்கும் வழக்கத்தையும் காவல்துறை பல இடங்களில் கடைப்பிடிக்கிறது.

அதுபோன்ற நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல், தனிப்பட்ட காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு, இரண்டு உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகியிருப்பது, காவல்துறையினர் சிலர் இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு உள்நோக்கத்துடன் செயல்பட எடப்பாடி அரசு அனுமதித்துவிட்டதோ என்கிற ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

காவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் - பென்னிக்ஸின் தாயாருமான செல்வராணி, காவல் நிலையக் கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் என அனைவருக்கும் புகார் தெரிவித்துள்ளார்.

பென்னிக்ஸின் சகோதரி கதறித்துடிக்கும் காணொலியைக் காணவே வேதனையாக உள்ளது. தன் சகோதரனை எப்படியெல்லாம் சித்ரவதை செய்து, ரத்தம் சொட்டச் சொட்ட காவல்துறையினர், பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள் என்பதை அவர் கதறி அழுதபடியே விவரிப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

எந்த ஒரு தனிமனிதருக்கும், எத்தகைய சந்தர்ப்பத்திலும், இத்தகையதொரு நிலை ஏற்படக்கூடாது.ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமியோ, பென்னிக்ஸ் மூச்சுத் திணறலாலும், ஜெயராஜ் உடல்நலக்குறைவாலும் இறந்தார்கள் என்று உண்மையை மறைத்தும், திரித்தும் கூறியிருக்கிறார்.

‘பழக இனிமை - பணியில் நேர்மை’ என்பதை, காவல் துறையின் மனதில் நிறுத்தச் சொன்னவர், காவலர்களின் நண்பனாக இருந்து ஆட்சி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ஆனால், இன்றைய நிலையில், ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லிக்கொண்டே காவல் துறையினரில் சிலர், மக்களின் உயிர் பறிக்கும் எதிரியாக மாறியிருப்பதன் மூலம், இந்த மாநிலத்தில் நடப்பது பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியா? சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் காவல் துறையினர் ஆட்சியா? என்று பொதுமக்கள் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

நோய்ப் பரவலைத் தடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்தாமல் - இந்தப் பேரிடரிலும் எப்படியெல்லாம் ஊழல் செய்யலாம் என யோசிக்கும் ஆட்சியாளர்கள், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நெருக்கடியை அதிகரிக்கும்போது, மக்களின் அன்றாட நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். சென்னை ஆவடி அருகே மின்வாரிய ஊழியர் அத்தியாவசியப் பணி கருதி வேலைக்குச் சென்றபோது, அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, அவர் தனது அடையாள அட்டையைக் காட்டியதையும் ஏற்காமல், சரமாரியாகத் தாக்கியதை சமூக வலைதளங்களில் காணொலியாகப் பார்க்க முடிந்தது.

அதுபோலவே, ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நாளிதழ்கள் - வார இதழ்களைக் கடைகளுக்குக் கொண்டு சென்றவர்களிடமும் சில இடங்களில் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

மருத்துவப் பணிகளுக்காகச் செல்பவர்கள்கூட காவல் துறையினரின் நெருக்கடிக்குள்ளாகின்ற செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. இவையனைத்தும் மனித உரிமை மீறல் புகார்களாக மாறி, காவல்துறையினருக்கே நெருக்கடியையும் கெட்ட பெயரையும் உண்டாக்கியிருக்கின்றன.

சட்டம் ஒழுங்கைப் பேணவும், மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விதிமுறைகளின்படி தண்டிக்கவுமே காவல் துறை உள்ளது. ஆனால், ஒருசிலர் செய்யும் தவறுகளின் மூலம், குற்றவாளிகளைக் காப்பாற்றி, மக்களின் உயிர் பறிக்கும் துறையாக அது தலைகீழ் மாற்றத்தைத் தற்போது அடைந்திருக்கிறது. இதைத்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது சாதனையாக நினைக்கிறது போலும்!

தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் அநியாயமாகப் உயிரிழந்தபோது, ‘அதனை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று ஏதுமறியாதவரைப் போலச் சொன்ன எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாடு மக்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறும்; ஆட்சியாளர்கள் மாறுவார்கள்; காவல்துறை என்பது மக்களைப் பாதுகாக்க வேண்டிய துறை என்பதை அதில் உள்ளவர்கள் மறந்துவிடக்கூடாது. வேலியே பயிரை மேயும் விபரீதத்தை அரங்கேற்றக் கூடாது. பொது உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்களின் ஏவல்துறையாக மாறிவிடாமல், தங்களின் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்.

சாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் விடுதலையும் - தண்டனைக் குறைப்புமே தீர்ப்பாக வந்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளைத் தனிப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல், சட்டரீதியாக அணுகுவதே திமுகவின் வழக்கம். இந்த வழக்கின் தீர்ப்பை சட்டரீதியாகப் பார்க்கும்போது, சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அரசுத் தரப்பில் உரிய ஆவணங்களை, ஆதாரங்களை, சாட்சிகளை முன்வைத்திருக்க வேண்டிய காவல் துறை, தன் கடமையிலிருந்து தவறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சொல்லியிருக்கிறார். அது இதுபோன்ற நேர்வுகளில் சொல்லப்படும் சம்பிரதாயமான வார்த்தைகளா, சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையா, காவல் துறை அப்போதாவது தன் கடமையைச் செய்யுமா, இளைஞர் சங்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது காட்சியாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் உரிய சாட்சியத்துடன் நிரூபித்து, இளம்பெண் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா?

காவல் துறை அதிகாரிகளே, சட்ட நெறிமுறைகளின் வழி, உங்கள் கடமையினைச் சரியாகச் செய்யுங்கள். அதற்குப் பொதுமக்கள் எப்போதும் கட்டுப்பட்டு நடப்பார்கள். நமது பொது மக்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள்; கரடு முரடான காரியங்களை வெறுப்பவர்கள். அவர்கள் உங்கள் காக்கி உடுப்பின்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள்.

குற்றங்களைத் தடுக்கும் வலிமை உங்களுக்கு நிரம்ப இருக்கிறது என மனதார நம்புகிறார்கள். அந்த எளிய மக்களின் நம்பிக்கையைச் சில நேரங்களில் பொய்யாக்கி, மனித நேயம் மறந்து, குற்றவாளிகள் பக்கம் நிற்பதையும், துப்பாக்கிச்சூட்டிலும் - காவல் விசாரணையிலும் அப்பாவி மக்களின் உயிர்பறித்து நீங்களே குற்றவாளிகளாகும் செயல்களையும் தவிர்த்து விடுங்கள். காலச்சக்கரம் இப்படியே சுழன்று கொண்டிருக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கானல் நீரான காவிரி...! கிராம மக்களுடன் தூர்வாரி மீட்டெடுத்த ஊராட்சி மன்ற தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details