தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெடிகுண்டு வீசிக்கொல்லப்பட்ட காவலர்: அதிமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - மு.க.ஸ்டாலின் - தலைமைக் காவலர் சுப்பிரமணியம்

சென்னை: தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது என, திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

வெடிகுண்டு வீசிக்கொல்லப்பட்ட காவலர் : அதிமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - மு.க.ஸ்டாலின்
வெடிகுண்டு வீசிக்கொல்லப்பட்ட காவலர் : அதிமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை - மு.க.ஸ்டாலின்

By

Published : Aug 19, 2020, 4:27 PM IST

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரை வனப்பகுதியில் கொலைக் குற்றவாளிகளைத் தேடிச் சென்ற காவலர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் தலைமைக் காவலர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்தார். வெடிகுண்டு வீசிய குற்றவாளி துரைமுத்துவும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. அவரது உயிரிழப்பிற்கான காரணம் தெளிவாகவில்லை.

இதனையடுத்து, சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற துரைமுத்துவின் உறவினர் சுடலைக் கண்ணன், துரைமுத்துவின் தம்பி சாமிநாதன், சிவராமலிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆழ்வார் திருநகரி முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருக்கு, 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை அலுவலர் ஒருவர் பணியின்போது, நாட்டு வெடிக்குண்டு வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், "தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல், காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details