தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 4:06 PM IST

ETV Bharat / state

'ஒப்பந்த ஊழலுக்கு காரணமாக எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிய வேண்டும்'

சென்னை: சென்னை மாநகராட்சியின் முறைகேடான ஒப்பந்தத்திற்கு காரணமான அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்த ஊழலுக்கு காரணமாக  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிய வேண்டும் !
ஒப்பந்த ஊழலுக்கு காரணமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு பதிய வேண்டும் !

இது தொடர்பாக அவர் இன்று (நவ. 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெரு விளக்குகளைக் கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் போது அதே கருவியைச் சென்னை மாநகராட்சி 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து மிகப்பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

தெருவில் உள்ள 40 முதல் 50 விளக்குகளைக் கண்காணிப்பதற்காக வழக்கம் போல் “தொழில்நுட்பங்கள்” அதிகம் உள்ள கருவி என்றும், டெண்டர் மூலமே வாங்கப்பட்டுள்ளது என்றும், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சொன்னாலும் - இதுமாதிரி கொள்முதல் ஊழல் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கீழ் தங்கு தடையின்றி அதிமுக ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருவியை 20 முதல் 25 ஆயிரம் ரூபாய்க்குக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அதுவும் 7 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொடுப்பதற்கு முன் வந்தும் - ரூ.57 ஆயிரத்திற்கு 1 ஆண்டு உத்தரவாதத்துடன் இது போன்ற கருவிகளைக் கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் பாழ்படுத்தியுள்ளார்.

அந்த அமைச்சரின் கீழ் உள்ள கோவை மாநகாட்சி இதே கருவியை 24 ஆயிரம் ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி ரூ.57 ஆயிரத்திற்கு வாங்கியிருக்கிறது. வேறு மாநகராட்சிகள் என்ன விலைக்கு வாங்கியிருக்கின்றன என்பது இன்னும் வெட்ட வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்தக் கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்குப் பதில் 40 கோடி ரூபாயைச் செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாகக் கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இந்தக் கருவி கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவித் திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியோ, ஜெர்மன் வங்கி வளர்ச்சி நிதியோ எதிலும் கொள்ளையடிப்பது என்ற ஒரே நோக்கில் உள்ளாட்சித்துறை அமைச்சர் செயல்பட்டு அரசுக் கருவூலத்தை - குறிப்பாக, மாநகராட்சிகளின் கருவூலத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவது போல “ஊழல்மணி” எஸ்.பி.வேலுமணியின் கீழ் உள்ளாட்சித்துறை தமிழ்நாடு வரலாற்றில் முதன் முதலாக கொள்ளையாட்சி த்துறையாக மாறியிருக்கிறது.

அதற்காகவே நகர்ப்புற மற்றும் மாநகராட்சி தேர்தல்களை நடத்தாமல் - தனி அதிகாரிகளையும், மாநகராட்சி ஆணையர்களையும் “கூட்டணி” சேர்த்துக் கொண்டு இப்படி அரசு பணத்தில் ஊழல் செய்து - ஊழல் சாக்கடையில் சுகமாக நீந்திக்கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்தும் - ஊழல் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கையிலிருந்தும் தப்பிக்க முடியாது.

ஆகவே 20 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய “தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவியை” 40 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும் இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் - இதுவரை பெறப்பட்ட கருவிகளைத் திருப்பிக் கொடுத்து- இந்த கொள்முதலுக்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

தினமும் ஒரு ஊழல் என்று அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதை எஞ்சியிருக்கின்ற மூன்று நான்கு மாதங்களுக்காவது ஒத்தி வைக்குமாறு அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு - தானும் அந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details