தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 8:49 PM IST

ETV Bharat / state

நோட்டரி வழக்குரைஞர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்!

சென்னை : நோட்டரிகளாக நியமிக்கப்படும் வழக்குரைஞர்கள், பணத்துக்காக வரைமுறையின்றி அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நோட்டரி வழக்குரைஞர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்!
நோட்டரி வழக்குரைஞர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம்!

காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டைவிட்டு காதலனுடன் சென்ற சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (செப்டம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மாணவியின் திருமண ஒப்பந்தத்திற்கு நோட்டரி வழக்குரைஞர் ஒருவர் சான்றளித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து நீதிபதிகள், "நோட்டரிகளாக நியமிக்கப்படும் வழக்குரைஞர்கள், நீதிமன்றத்துக்கு வெளியில் காரில் அமர்ந்து கொண்டு, பணத்துக்காக இதுபோல சான்றிதழ்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை நீதிமன்றம் கையில் எடுக்கும்.

நோட்டரி வழக்குரைஞர்கள் கையெழுத்திட்ட பூர்த்தி செய்யப்படாத முத்திரைத்தாள்கள் எளிதாக பெட்டிக்கடைகளில் கிடைக்கிறது. அந்த சான்றுகள் தவறாக பயன்படுத்தப்படும் என்பது அவர்களுக்கு தெரியாதா ? இதை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது" என தெரிவித்தனர்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நோட்டரி வழக்குரைஞர்களுக்கு எதிராக வந்த புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க, தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details