இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் தொடர்பாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலரின் பெயர், தொழில், சுய வருமானம், கோவிலின் பாரம்பரிய நடைமுறைகளின் ஞானம், கோயில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடாதவரா?அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றக்கூடியவரா? போன்ற விவரங்களை அந்ததந்த பகுதிகளில் உள்ள நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும். மேலும், அவற்றை கோயில் அலுவலகங்களில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.கார்த்திகேயன் தாக்கல் செய்த பதில் மனுவில், "துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில் அறங்காவலர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பம் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சட்டப்படி, பொதுவில் வெளியிட முடியாது.மேலும், சில குறிப்பிட்ட தகவல்களை அறிய விரும்புவோர் தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டுப்பெறலாம்" என கூறப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஸ்ரீதர், "பெயர் வெளியிடுவது மட்டும் போதாது. கோயில் நிர்வாகம் தொடர்பான புகார்களை தெரிவிக்க அதன் நிர்வாக அலுவலர்களது தொடர்பு எண்ணை அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், "கோயில்களின் அறங்காவலர்களின் பெயர், முகவரி, தொழில், அவர்களின் தொடர்பு எண்கள், கோயில் குறித்த புகார்களை தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் விவரங்களையும் கோயில்களின் அறிவிப்பு பலகையில் 8 வாரங்களில் பதிவு செய்திட வேண்டும்" என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.