தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகருக்கு முன்பிணை வழக்கிய நீதிமன்றம்! - Anticipatory bail for bjp spokesperson Sv sekar

சென்னை : தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியதை அடுத்து, அவருக்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னிப்புக்கேட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருக்கு முன்பிணை வழக்கிய நீதிமன்றம்!
மன்னிப்புக்கேட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருக்கு முன்பிணை வழக்கிய நீதிமன்றம்!

By

Published : Sep 16, 2020, 4:23 PM IST

ஜூலை மாதம் எம்ஜிஆர் சிலைக்கு காவிப்போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகர், காவியை களங்கம் எனக் குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர் 'களங்கமான தேசியக்கொடி'யைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை, பச்சை நிறம்கொண்ட கொடியை ஏற்கிறாரா? என தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தேசியக்கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசி சமூக வலைதளங்களில் காணொலிகளாக வெளியிட்டுவந்த பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் இணையவழி மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு இரண்டின் கீழ் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால், முன் முன்பிணைக் கோரி எஸ்.வி. சேகர் கடந்த ஜூலை 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேச மாட்டேன் என கூறி மன்னிப்பு கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக இன்று (செப்டம்பர் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தேசியக்கொடியை அவமதித்தது மற்றும் முதலமைச்சரின் பேச்சுக்கு களங்கம் கற்பித்ததற்கு மன்னிப்பு கேட்டு எஸ்.வி சேகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உத்தரவாத மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேவைப்படும் போது காவல்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் எஸ்.வி சேகருக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details