மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நல ஆர்வலர் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின்படி, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்கப்படவில்லை. எனவே, உடனடியாக மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அவற்றில் வசதிகள் ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், "சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை 2017ஆம் ஆண்டு ஆய்வுசெய்து, அவை மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியானதாக இல்லை எனத் தெரிவித்தபோதும், அது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போதுவரை அவை மாற்றியமைக்காததால், ரயில் நிலையங்களை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உள்ளதா? என்பதை நேரில் சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.