சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (செப்டம்பர் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், "அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், ஆனால் அவர் மீதான புகாரில் எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும், எனவே அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் மீதான விசாரணை அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் கருதினால் வேறு விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிடமுடியுமா? புதிய விசாரணை அமைப்பு விசாரிக்கவேண்டும் என்றால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டுமா? என்பது குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் கீழ் உள்ளவரை பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அறப்போர் இயக்கம் அது குறித்து கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.