தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொல்லியல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிமன்றம்! - TN Archeology site reports

மதுரை : தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல் துறை ஏன் ஆய்வு மேற்கொள்ளக் கூடாதென மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பி உள்ளது.

தொல்லியல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!
தொல்லியல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிமன்றம்!

By

Published : Oct 6, 2020, 8:37 PM IST

தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வை தொடரவும், இதுவரை செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளை வெளியிடவும் வலியுறுத்தி வழக்குரைஞர் திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கேட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் தொடங்கும்.

கீழடி 5 மற்றும் 6ஆம் கட்ட ஆய்வுகள் குறித்து தமிழ்நாடு அரசு விரைவில் முடிவுகளை வெளியிடும்" என தெரிவித்தார்

இதனையடுத்து நீதிபதிகள், "ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை அகழாய்வு தொடர்பான அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தும் ஒரு ஆய்வின் அறிக்கை மட்டுமே வெளியாகியுள்ளது. மற்ற இடங்களில் நடந்த ஆய்வின் அறிக்கைகள் ஏன் இதுவரை வெளியிடப்படவில்லை?

அவற்றின் தற்போதைய நிலை என்ன? எப்போது அறிக்கை வெளியிடப்படும்? தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதியை ஏன் சென்னையில் ஏற்படுத்தக் கூடாது ? தமிழக தொல்லியல் துறையின் விண்ணப்பத்தின் மீது எப்போது மத்திய தொல்லியல் துறை அனுமதி கிடைக்கும் ? தமிழ்நாட்டில் ஏன் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details