தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதிலளிக்காமல் காலம் கடத்திவந்த அரசுக்கு அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்! - Madras High Court

சென்னை : விவசாயத்திற்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய் மீது சாலை அமைப்பதை தொடர்பான வழக்கில் பதிலளிக்காத அரசுக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிலளிக்காமல் காலம் கடத்திவந்த அரசுக்கு அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!
பதிலளிக்காமல் காலம் கடத்திவந்த அரசுக்கு அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

By

Published : Oct 7, 2020, 5:04 PM IST

கால்வாய் மீது சாலை அமைக்க கோவை ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குத்தகை விவசாயிகள் மற்றும் பேரூர் கீழேரி நீர் பாசன விவசாயிகள் சார்பில் அதன் தலைவர் சிவசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்திருந்தார்.

அம்மனுவில், "கோவை மாவட்டத்தை அடுத்த பேரூர் பகுதியில் விவசாயத்திற்கு நொய்யல் ஆறு மிக முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. இந்த பாசனத்தினை பயன்படுத்தி பேரூர் கீழேரி பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர்.

இந்த கோயில் நிலங்களின் ஒரு பகுதி விவசாய நிலமாகவும், மற்றொரு பகுதி நீர்வரும் கால்வாயாகவும் நடுவில் மண்ணால் போடப்பட்ட சாலையும் இருக்கிறது.

கால்வாய் முறையாக பரமாரிக்கப்படாத நிலையில் அங்கு குப்பைகள் கொட்டுபடுவதும், ஆக்கிரமிக்கப்படுவதும் அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கால்வாய் மீது புதிய சாலை அமைப்பதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இந்த அனுமதி தொடர்பாக அப்பகுதியின் கிராம மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.

எனவே, கால்வாய் மீது சாலை அமைக்க கோவை ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது, உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மனுதாரரின் மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டுமென முந்தைய விசாரணையில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி அனிதா சுமந்த், மனு மீது பதிலளிக்காமல் தொடர்ந்து கால அவகாசம் கேட்டுக்கொண்டே இருப்பதால் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூர் பஞ்சாயத்தின் செயல் அலுவலர் ஆகியோருக்கு தலா 2 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அந்த தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் அளிக்க வேண்டும் என ஆணையிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது, விசாரணை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details