புதுச்சேரி:புதுச்சேரி மாநிலத்தில் பல மாதங்களாகத் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று இருந்துவருகிறது. கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 15ஆம் தேதி இரவு வரை ஊரடங்கு ஆனது நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாகச் சமுதாயம் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு சார்ந்த கூட்டங்கள் நடத்தக் கூடாது என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. மற்றபடி ஏற்கனவே உள்ள தளர்வுகள் அனைத்தும் நீடிக்கும் என்றும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும்.
அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்துவித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.