கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 14) தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 16) சட்டப்பேரவையில் பல்வேறு அரசு சட்ட முன்வடிவுகள் தாக்கல்செய்யப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டங்கள் மூன்றாம் திருத்த சட்ட முன்வடிவு மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் மூன்றாம் திருத்த சட்ட முன்வடிவுகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல்செய்தார். இந்தச் சட்டதிருத்த முன்வடிவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதையடுத்து உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்ட முன்வடிவு குரல் வாக்கெடுப்புடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "உச்சநீதிமன்றம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் உத்தரவிட்ட ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.