திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (நவ. 21) தேர்தல் பரப்புரை பயணத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபியிடம் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில், "திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டுவரும் தேர்தல் பரப்புரை நிகழ்வுகளில் அரசு வகுத்துள்ள விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறது. தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சரும், அமைச்சர்களும், இதர ஆளுங்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அரசின் அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுவருகிறது.
தனிநபர் இடைவெளியின்றி விதிகளை புறக்கணித்து நடைபெறும் அத்தகைய நிகழ்ச்சிகளை ஊடகங்கள் படத்துடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அதிமுக தலைமையகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் 49ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவில் பலநூறு பேர் தனிநபர் இடைவெளியின்றி கூடினர், அதில் அனைத்து விதிகளும் புறக்கணித்தனர்.
இன்று (நவ. 21) சென்னைவந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதிலும் சாலை நெடுகிலும் அவரை வரவேற்க பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் திரண்டிருந்ததிலும் தனிநபர் இடைவெளி சிறிதும் பின்பற்றப்படவில்லை.
திருக்குவளையிலும், அக்கரைப்பேட்டையிலும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்பட்டது ஒருதலைபட்ச நடவடிக்கை. திமுகவின் தேர்தல் பரப்புரையை திட்டமிட்டு முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் காவல் துறையின் இந்த கைது நடவடிக்கைகள் இருக்கிறது.
தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து ஒருதலைபட்சமாக செயல்படுவதை டிஜிபி நிறுத்தவேண்டும். தவறினால் திமுக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என தெரிவித்துள்ளார்.