தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர் சங்கம் மற்றும் 9 பெண் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிஷோர் கே ஸ்வாமியை தேடிப் பிடித்த காவல் துறையினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், கிஷோர் கே ஸ்வாமியை காவல்துறையினர் கைது செய்யாமல், விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை மட்டும் கொடுத்து விடுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்கள் குறித்து உண்மைக்கு மாறான அவதூறுகளைப் பரப்பி கொச்சைப்படுத்திய கிஷோர் தன்னை விடுவிக்க உதவியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு நன்றி கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கிஷோர் கே ஸ்வாமி புகார் கொடுத்த பெண் பத்திரிக்கையாளரை மீண்டும் சமூக வலைதளத்தில் அவதூறான வகையில் பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், சென்னை காவல் துறை நடவடிக்கையை விமர்சித்து சமூக வலைதளமான ட்விட்டரில் #ShameonyouChennaipolice என்ற ஹாஷ்டேக்கில் கண்டனங்களை நெட்டிசன்கள் பதிவுசெய்தனர்.
இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் நேரடியாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை காவல் துறை, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்குப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாகவும், விசாரணை நடத்திய முறை குறித்தும் விளக்கம் அளித்துள்ளது.
அதில், "சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முகாந்திரம் இருப்பதால் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும். விசாரணையின்போது கிஷோர் கே ஸ்வாமி சமூக வலைதளத்தைப் பயன்படுத்தாத அளவுக்கு, அவரது செல்போனை முடக்கி வைக்கப்படிருக்கிறது. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் மற்றும் செய்திகளைப் பதிவிட நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.