கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாலையிலேயே அம்மனை வழிபட்டு பூஜை செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள பக்தர் ஒருவர், அம்மனை தரிசிக்க கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோயிலின் பின்பக்கம் அமைந்துள்ள கருவறை கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அங்கு விரைந்து வந்த தென்தாமரைகுளம் காவல் துறையினர் கோயிலினுள் சென்று விசாரணை நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 17 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், உண்டியல் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த, காவல் துறையினர் இந்த திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்தாமரைகுளம் காவல் நிலையத்தின் மிக அருகாமையில் உள்ள இக்கோயிலில் திருட்டு நடைபெற்றது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.