இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவியை கலைத்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது. தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவத்துக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முயன்று வரும் நிலையில், உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த வினா எச்சரிக்கை மணியாகும்.
ஆயுஷ் என்பது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். ஆனால், அண்மைக்காலமாக ஆயுர்வேதத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சித்தா உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
ஆயுர்வேதம் தவிர்த்த மற்ற இந்திய மருத்துவ முறைகளின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆயுஷ் அமைச்சகம் செயல்படுவது சரியல்ல. சித்த மருத்துவ முறைக்கு உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. உலகிற்கே மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ள கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் கூட சித்த மருத்துவம் முத்திரை பதித்திருக்கிறது.