பல்லுயிர் சூழலின் அடையாளமாகத் திகழும் யானைகளின் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (நவம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "மசினகுடி பகுதியில் டாஸ்மாக் கடைகள் ஏதும் தொட்கும் திட்டம் இல்லை" என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இது சம்பந்தமாக கடந்த செப்டம்பர் மாதம் அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ - சேவை என்பது காகித அளவிலேயே இருக்கிறது. கோரிக்கை மனுக்களுக்கு அலுவலர்கள் உரிய பதிலளித்து இருந்தால், இதுபோன்று பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்க மாட்டாது. மனுக்களுக்கு பதிலளிக்காத அலுவலர்களின் மெத்தன போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்காத அலுவலர்கள் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும் படி ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை" என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.