தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழ்நாடு மாணவர்: உடலை தாயகம் கொண்டுவர அரசு உதவ வேண்டுமென தந்தை கோரிக்கை! - ரஷ்யாவின் ஓல்கா நதியில் மூழ்கி உயிரிழந்த மருத்துவ மாணவர் முகமது ஆசிப்

திருப்பூர் : ரஷ்யாவின் ஓல்கா நதியில் மூழ்கி உயிரிழந்த மருத்துவ மாணவர் முகமது ஆசிப்பின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர் : உடலை தாயகம் கொண்டுவர அரசு உதவ வேண்டுமென தந்தை கோரிக்கை!
ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர் : உடலை தாயகம் கொண்டுவர அரசு உதவ வேண்டுமென தந்தை கோரிக்கை!

By

Published : Aug 10, 2020, 2:43 AM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சொக்கநாதபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக். யுனானி மருத்துவரான இவர் தாராபுரத்தில் மருத்துவ மையம் வைத்து நடத்துகிறார்.

இவருக்கு முகமது ஆசிப் (20), முகமதுஆதிக் (16), அபூஹரேர அபாக் (4) ஆகிய மூன்று மகன்கள். இதில் முதல் மகன் முஹம்மது ஆசிப் ரஷ்ய நாட்டு வோல்கோகிராட் ஸ்டேட் ஆஃப் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவப் படிப்பை பயின்று வந்தார். அடுத்த 6 மாதங்களில் மருத்துவக் கல்வியை முடித்து தாராபுரம் திரும்பவிருந்தார்.

இந்நிலையில், ஆசிப் தனது நண்பர்களுடன் ஓல்கா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, அவருடன் சேர்ந்த அவரது நண்பர்கள் நான்கு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.

மருத்துவ மாணவர் முகம்மது ஆசிப், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தாராபுரம் சொக்கநாதபாளையம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து முகமது ஆசிக்கின் தந்தை டாக்டர் முகமது ரஃபிக் கூறுகையில், "எனது மகன் ரஷ்யாவில் மருத்துவம் 5ஆம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவப் படிப்பில் அதிகம் ஆர்வம் இருந்த காரணத்தால் இந்திய மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்காத நிலையிலும் வெளிநாட்டிலாவது படித்தே தீர வேண்டும் என அவரே முயன்று ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்றார்.

எங்களை விட்டு பிரிந்து ரஷ்யாவில் படிக்கச் சென்ற அவர், இப்போது நிரந்தரமாக எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.

நேற்று (ஆகஸ்ட் 9) நண்பகல் தான் என் மகன் ஆசிப் இறந்தது இந்திய தூதரக அலுவலர்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டது. எனது மகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர வேண்டும். மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details