தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிணைக்காக மன்னிப்புக்கோர தயார் எஸ்.வி. சேகர் - கலாய்க்கும் இணையவாசிகள்! - Madras high court

சென்னை : தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் கோரிக்கைவைத்துள்ளார்.

 பிணைக்காக மன்னிப்புக் கோர தயார் எஸ்.வி.சேகர் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிணைக்காக மன்னிப்புக் கோர தயார் எஸ்.வி.சேகர் - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

By

Published : Aug 28, 2020, 2:18 PM IST

கடந்த மாதம் எம்ஜிஆர் சிலைக்கு காவிப்போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி. சேகர், காவியை களங்கம் எனக் குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர் 'களங்கமான தேசியக்கொடி'யைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை, பச்சை நிறம்கொண்ட கொடியை ஏற்கிறாரா? என தேசியக் கொடியை அவமதிப்புச் செய்யும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தேசியக்கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசி சமூக வலைதளங்களில் காணொலிகளாக வெளியிட்டுவந்த பாஜக பிரமுகர் எஸ்.வி. சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் இணையவழி மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு இரண்டின் கீழ் எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன் முன்பிணைக் கோரி எஸ்.வி. சேகர் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

காவல் துறை சார்பில் முன்னிலையான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், "தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கு, எஸ்.வி. சேகர் சம்பந்தமின்றி காவி நிறம் இந்துத்துவத்தைக் குறிக்கும், வெள்ளை நிறம் கிறிஸ்துவத்தை குறிக்கும், பச்சை நிறம் இசுலாமியத்தை குறிக்கும் என ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டப்படி தேசியக்கொடியின் மூன்று நிறங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளபோது, அதற்கு மாறாகத் தவறான கருத்தை எஸ்.வி. சேகர் தெரிவித்து, கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் தேசியக்கொடிக்கு மத ரீதியான அடையாளத்தைத் தர முயல்கிறார்.

தேசியக்கொடியை அவமதித்ததால் பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை (ஆகஸ்ட் 28) விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னிலையான எஸ்.வி. சேகரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் மீண்டும் அவரை முன்னிலையாக காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

அதற்கு எஸ்.வி. சேகர் தரப்பு வழக்குரைஞர், "அடுத்த விசாரணை வரை மனுதாரரைக் கைதுசெய்ய தடைவிதிக்க வேண்டும். மன்னிப்புக்கோரி மனு தாக்கல் செய்யும்வரை அவகாசம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.

இதற்குப் பதிலளித்த காவல் துறை தரப்பு, "விசாரணையின்போது எஸ்.வி. சேகர் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அவரைக் கைதுசெய்வது குறித்து முடிவெடுக்க முடியும். இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும். மன்னிப்புக்கோரி மனு தாக்கல்செய்தால் செப்டம்பர் 2 வரை எஸ்.வி. சேகரை கைதுசெய்ய மாட்டோம் " என வாய்மொழி உத்தரவாதம் அளித்தனர்.

இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், எஸ்.வி. சேகர் முன்பிணை மனு மீதான விசாரணையை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

எஸ்.வி. சேகர் உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனு தொடுத்திருப்பதை இணையவாசிகள் பல்வேறு மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details