அரசின் விதிமுறைப்படி தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கிராமசபைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை, கழிப்பிட பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு மாற்றுதல், குடிநீர் மின் மோட்டாரை பழுது நீக்குதல் உள்ளிட்ட, நடக்காத பல பணிகள் குறித்தும், மேலும் மரக்கன்றுகள் நட்டதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது. கிராமசபைக் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட அனைத்தையும் வீடியோ எடுத்த இளைஞர்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமலைராயசமுத்திரம் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாகிகள் வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் கொண்டு வராததால் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டது.
தொடர்ந்து ஊராட்சியில் பஞ்சாயத்து போர்டு கிளார்க், மத்திய அரசின் திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அந்தக் கணக்கை சரியாக ஒப்படைத்துவிட்டு கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கு கிராம மக்கள் தடைபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை:
பட்டுக்கோட்டை அருகில் உள்ள சுந்தரநாயகிபுரம் கிராமத்தின் முதல் கிராம சபைக் கூட்டம், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. கிராமத்தின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலைவசதி, வடிகால் வசதி ஆகியவற்றை மேம்படுத்துவது என்றும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டு என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மீனவர்கள் வாழ்க்கையை பாதிக்கின்ற, உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர். இது அரசுக்கு எதிரான தீர்மானம் என்றும், இதனை நிறைவேற்ற இயலாது எனவும் கூறி அரசு அலுவலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன் பிறகு கிராமசபைக் கூட்டம் பதிவேட்டில் தீர்மானத்திற்கான அனைத்தையும் எழுதி மக்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைவைத்து சட்டப் போராட்டத்தின் மூலம் இதற்கு ஒரு தீர்வு காண உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இருந்ததால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.