தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கக்கூடாது - பி.ஆர். பாண்டியன் - PR.Pandiyan Vs Edappadi palaniswami

திருவாரூர் : ஒப்பந்த சாகுபடி, நிலம் கையகப்படுத்தல் போன்ற அவசர சட்ட திருத்தங்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கக்கூடாது
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கக்கூடாது

By

Published : Sep 22, 2020, 6:48 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கார்ப்பரேட்டுகளிடம் விவசாயிகளை அடிமையாக்கும் மூன்று சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு முயற்சி எடுத்துவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 'ஒப்பந்த சாகுபடி சட்டம்' என்கிற பெயரில் ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இந்தச் சட்டம்கூட மத்திய அரசின் கறுப்புச் சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக உள்நோக்கத்துடன் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதா? தமிழ்நாட்டை சோதனைக் களமாக மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தி உள்ளதா? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

மத்திய அரசின் சட்டத் திருத்தங்கள் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "மத்திய அரசு சட்டமுன்வடிவுகளைக் கொண்டுவரும்போது எதிர்க்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதே சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியபோது ஏன் அதை எதிர்க்கவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது சந்தேகமளிக்கிறது.

இக்கேள்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும், தமிழ்நாட்டில் நகர விரிவாக்கத் திட்டங்கள் ஊரக விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்கிற ஒரு அவசர சட்டத்தையும் தற்போது தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இந்தச் சட்டம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் எந்தப் பதிலும் அளிக்க முன்வரவில்லை.

கரோனா பரவலைக் காரணம் காட்டி கடந்த இரண்டு நாள்களில் சட்டப்பேரவையில் அவசர கதியிலேயே 19 அவசர சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகுந்த சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

நாம் அனைவரும் இ.ஐ.ஏ. 2020 என்னும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசு வரைவை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறபோது, அதற்கு இணையான மிக மோசமாக சதி தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தல் திட்டத்திற்காக விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை என்ற ஒரு கறுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பது விவசாயிகளுக்கு செய்திருக்கிற மிகப்பெரிய துரோகம்.

இவ்விரு சட்டங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் இந்த அவசர சட்டங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களையும் இணைத்துக்கொண்டு, உடனடியாக ஆளுநரை நேரில் சந்தித்து இந்தச் சட்டத் திருத்தங்களுக்கு அனுமதி அளிக்க க்கூடாது எனக் கோரிக்கைவிடுக்க வேண்டும்

இந்தச் சட்ட முன்வடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், விளைநிலங்களை அபகரித்து சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களுக்கு நிலங்களைச் சர்வசாதாரணமாக அரசு கையகப்படுத்தும்.

நீதிமன்ற உத்தரவுகளைப் பொருள்படுத்தாமல், காவல் துறையை வைத்து நிலங்களை கையகப்படுத்தும், விவசாயிகளை துன்புறுத்துவதற்கும் இச்சட்டம் வழிவகுக்கும் என எச்சரிக்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details