கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால், காதலனின் அண்ணன் வெட்டியதில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
வர்ஷினி பிரியாவின் குடும்பத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் - Vashini's family
கோவை: ஆணவக் கொலையில் இறந்த வர்ஷினி பிரியாவின் பெற்றோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் வர்ஷினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், வர்ஷினி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். ஆணவக் கொலையில் இறந்த வர்ஷினியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோல் சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்", என்றார்.