தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் தொடுத்த வழக்கு: போக்குவரத்துத் துறை அளித்த உத்தரவாதம்! - Tamilnadu public transportation

சென்னை : மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் வடிமைக்கப்பட்ட பேருந்துகளே இனி கொள்முதல் செய்யப்படும் எனப் போக்குவரத்துத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தொடுத்த வழக்கு - போக்குவரத்துத் துறை அளித்த உத்தரவாதம்!
மாற்றுத்திறனாளிகள் தொடுத்த வழக்கு - போக்குவரத்துத் துறை அளித்த உத்தரவாதம்!

By

Published : Sep 15, 2020, 6:44 PM IST

2017ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அதில், "கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், கல்வி நிலையங்கள், ரயில் - பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகவும், பயணிக்கவும் ஏற்ற வகையிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகவும், பயணிக்கவும் ஏற்ற வகையிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு முறையீடு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு அமல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு ஆயிரக்கணக்கான பேருந்துகள் கொள்முதல்செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக எந்தப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படவில்லை" எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்குப் போக்குவரத்துத் துறை சார்பில் முன்னிலையான வழக்குரைஞர், "இனிமேல் கொள்முதல்செய்யப்படும் 50 பேருந்துகளில் 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம்செய்யும் வகையில் கொள்முதல் செய்யப்படும்" என உத்தரவாதம் அளித்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து ரயில்வே துறை, பள்ளிக் கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details