கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25 ஆயிரத்து 939 தமிழர்களைத் தாயகம் அழைத்துவர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், "கரோனா காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரை 101 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்ந்த பின் இதுவரை மொத்தமாக 286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 58 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்தியாவுக்கு இயக்கவுள்ள 792 விமானங்களில், தமிழ்நாட்டிற்கு 127 விமானங்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலமாக தமிழர்கள் அனைவரையும் தாயகம் அழைத்துவருவதில் மத்திய விமானப் போக்குவரத்து துறை உறுதியாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் விளக்கத்தைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, குறிப்பிட்ட கால அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். மத்திய அரசு ஒருவேளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங்களின்படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில் நீதிமன்றத்தை மீண்டும் அணுக திமுகவிற்கு அனுமதியளித்தும் வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.