விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், கூடுதல் கரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் தனியார் கல்லூரி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டையில் கரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சை மையத்திலுள்ள 140 படுக்கைகளில் தற்போது 99 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், கூடுதல் கரோனா சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள், தனியார் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சொக்கலிங்கபுரத்திலுள்ள சௌடாம்பிகா பாலிடெக்னிக் மாணவர் விடுதியில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக மாவட்ட சுகாதாரப் பிரிவு மருத்துவர்கள் விஜய், யோகேஷ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் உதவியாளர் செல்வராஜ் உள்ளிட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் விடுதியிலுள்ள அறைகளில் எத்தனை படுக்கை வசதிகள் அமைக்கலாம்.
கழிப்பிட வசதிகள், இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முன்னாள் நகராட்சி சேர்மன் சிவப்பிரகாசம் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.