சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனியார் டி.வி. நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனி ஒரு செயலி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தள்ளார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (29) என்பவர் அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியதாகக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து,அங்கு விரைந்த ஐதராபாத் சைபர் கிரைம் காவல் சார்பு ஆய்வாளர் ரவீந்தர் தலைமையில் காவலர்கள் சுனில், திருமாவேலன், குபேந்தர், மணிகண்டா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் ராமமூர்த்தியை கைது செய்தனர். அதன் பின்னர் அவரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில், ராமமூர்த்தியிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி என்பதும், கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது வீட்டிலிருந்து தனது நிறுவனத்தின் வேலைகளைச் செய்து வந்ததாகவும் அப்போது ஒரு புதிய செயலியை உருவாக்கி அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பியதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடி - திடீரென காதலன் தற்கொலை