தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் தமிழை கற்றுக்கொடுக்க நிபந்தனைகள் விதிப்பதா? - எஸ்டிபிஐ கட்சி கேள்வி - SDPI Party Question

சென்னை : மத்திய அரசு நிறுவனத்தின்கீழ் இயங்குவதால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கேள்வியெழுப்பி உள்ளார்.

பள்ளிகளில் தமிழை கற்றுக்கொடுக்க நிபந்தனைகள் விதிப்பதா ? - எஸ்.டி.பி.ஐ கட்சி கேள்வி
பள்ளிகளில் தமிழை கற்றுக்கொடுக்க நிபந்தனைகள் விதிப்பதா ? - எஸ்.டி.பி.ஐ கட்சி கேள்வி

By

Published : Nov 14, 2020, 10:13 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டுவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பது தொடர்பாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் விதி 112இன் படி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே தமிழ் மொழியை கற்றுக்கொடுப்பதற்காக தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர் என்றும், வாரத்திற்கு மூன்று நாள்கள், அதுவும் மூன்று மணி நேரம் மட்டுமே கற்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பில் இருந்து அல்லாமல், ஆறாம் வகுப்பில் இருந்து தான் தமிழ் மொழி கற்பிக்கப்படும் என்றும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 112-இன் விதி கூறுகிறது.

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழ் மீது, மத்திய பாஜக அரசு கொண்டுள்ள மறைமுகமான வெறுப்புணர்வை வெளிக்காட்டுகிறது. இத்தகைய அறிவிப்பை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களாகவே இருக்கும் நிலையில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இந்தி உள்ளிட்ட பிறமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது, தமிழ் மொழியை புறக்கணிக்கும் தெளிவான தமிழ் விரோத நடவடிக்கையாகும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய அரசு நிறுவனம் என்பதால், தமிழ் மொழிக்கு எதிரான இந்த நடவடிக்கையை மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்துகிறது என்று எஸ்டிபிஐ கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை அனைத்து வகுப்புகளிலும் அனைத்து நாள்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்.

மேலும், தமிழ் மொழியை பயிற்றுவிக்க நிரந்தர தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் கவனமெடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் இந்த நடவடிக்கையை, ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுகொள்கின்றேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details