திருச்சி திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட 63ஆவது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் 3.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'என்னத்த களம்' என்ற களத்துமேட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 63ஆவது வார்டில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் அமைய இருக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அந்த இடத்திற்கு நேரில் சென்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்னை தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் வழங்கவில்லை என தெரிகிறது.