மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட ஏழு மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளன. அதேபோல, பாஜக ஆட்சியில் இல்லாத ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநில முதலமைச்சர்களும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2020 எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்பதாலும், சில மாதங்களில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையிலுமே தேர்வுகள் ஜூன் 2020க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கியப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.