தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, அன்றிரவு ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் அதிமுக அரசு மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
இதனையடுத்து, முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 2017 பிப்ரவரி 18ஆம் தேதி பேரவையில் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.