தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறு பெருந்துயர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு!

தேனி : மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழக தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.

மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

By

Published : Aug 9, 2020, 8:32 PM IST

Updated : Aug 9, 2020, 9:43 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராஜமலை பெட்டிமுடி பகுதி. அங்கு டாடா நிறுவனத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக அந்நிறுவனத்தால் கட்டித்தரப்பட்ட சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவந்தனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வீடுகள் சிக்கி மண்ணில் புதைந்தன. அந்தக் கோர விபத்தில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, மீட்புப் படையினருடன் மாநில பேரிடர் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சம்பவ இடத்தில் மோசமான வானிலை நிலவிவருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதையடுத்து தேசிய பேரிடர் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 7) 15 பேர் சடலமாகவும், 12 பேர் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள்

டாடா மருத்துவமனை மற்றும் கோலெஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று (ஆகஸ்ட் 8) ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெட்டிமுடி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டது.

இருப்பினும், மாநில மற்றும் தேசிய அளவிலான பேரிடர் மீட்புப் பணிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் முழுவீச்சில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மீட்பு பணியில் 19 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள்

1) பிரபு(55)

2) பாரதிராஜா(33)

3) சரிதா(55)

4) அருண்மகேஸ்வரன்(34)

5) பவுன்தாய்(52)

6) செல்லத்துரை(37)

7) தங்கம்மாள்(45)

8) தங்கம்மாள்அண்ணாதுரை(42)

9) சந்திரா(63)

10) மணிகண்டன்(22)

11) ரோஸின்மேரி(54)

12) கபில்தேவ்(28)

13) ஏசையா(58)

14) சரஸ்வதி செல்லம்மாள்(60)

15) காயத்ரி(23)

16) லக்ஸனாஸ்ரீ(7)

17) அச்சுதன் (எ) சுடல(52)

18) சஞ்சய்(14)

19) அஞ்சுமோல(21) என அடையாளம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட சடலங்கள் அனைத்தும் கரோனா விதிமுறைகளின்படி உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்டு டாடா நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Last Updated : Aug 9, 2020, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details