விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை நான்கு நாள்கள், பெளர்ணமி நான்கு நாள்கள் என மொத்தம் எட்டு நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழ்நாடு அரசு கடந்த 1ஆம் தேதிமுதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கலாம் என அறிவித்தது.
இந்நிலையில் வருகிற 17ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு வரும் 15ஆம் தேதிமுதல் 18ஆம் தேதி வரை பக்தர்கள் நான்கு நாள்கள் கோயிலுக்குச் சென்று தரிசிக்க, அக்கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மழை காலமாக இருப்பதால் அமாவாசை அன்று அல்லது அதற்கு முன்பாக மழை பெய்தால் மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.