அண்மை காலமாக தமிழ்நாட்டில் உள்ள பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிபிஎம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 56 நபர்கள் மீது வேப்பேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்றுநோய் பரப்புதல், அரசு உத்தரவை மீறுதல், அரசு உத்தரவை மீறி போராட்டம் செய்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போல், புரசைவாக்கம் பகுதியில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நேற்று (ஆகஸ்ட் 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சி.எஃப்.ஐ அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமையில் நபர்கள் மீது வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.