தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஒன்றான 10ஆவது வார்டு பகுதியில் பட்டியலின மக்கள் அதிகளவு வசித்துவருகின்றனர்.
அப்பகுதியில் குடிநீர், கழிப்பிட வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இதுவரை நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்துதரப்படவில்லை என அறியமுடிகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் இதுவரை பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து, தென்காசி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து (நவ. 04) இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.எம்) சார்பில் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு வந்த நகராட்சி நிர்வாகத்தினர் 10ஆவது வார்டில் வசித்துவரும் மக்களுடைய கோரிக்கையை நல்லெண்ண அடிப்படையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.