தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி, அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் திமுக எம்.பி., ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
டெண்டர் முறைகேடு வழக்கில் அமைச்சரின் வேண்டுகோளை நிராகரித்த நீதிமன்றம்! - Madras Highcourt
சென்னை : மாநகராட்சி டெண்டரில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்கு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (செப்டம்பர் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் காணொலி மூலம் இல்லாமல் நேரடியாக வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதி நேரடியாக விசாரிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
டெண்டர் முறைக்கேடு தொடர்பான வழக்கு மீதான விசாரணை நிலுவையில் உள்ளவரை பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.