தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - Tutucorin sand looting

மதுரை : சட்ட விரோதமாக இயங்கிவரும் மணல் குவாரிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் கொள்ளை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய  நீதிமன்றம் உத்தரவு!
மணல் கொள்ளை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Oct 24, 2020, 6:25 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா அருகே சுமார் 913 ஏக்கர் பரப்பளவில் வெள்ளூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து ஏறத்தாழ 2,500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசனத்திற்கான நீர் வசதியை பெற்று வருகிறது.

அந்த கண்மாயை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவதாகக் கூறி அனுமதி பெற்று, சில சமூக விரோத கும்பல்கள் சட்டவிரோதமாக மணலை கடத்தி வருகின்றனர். மணல் விற்பனை குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளன. ஆனால், எதையும் பின்பற்றாமல் மணலை கொள்ளையடித்து வருகிற சமூக விரோதக் கும்பலுடன் கூட்டு சேர்ந்து அரசு அலுவலர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில தனிநபர்கள் கனரக இயந்திரங்கள் மூலம் இரவு நேரங்களில் 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு கனிம வள அலுவலர்கள், வருவாய் துறை அலுவர்கள் என பலரும் உடந்தையாக உள்ளனர்.

இந்த சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க உயர் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் என பலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மணல் கொள்ளையால் அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் சேதமடைகின்றன. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீர் இன்றி பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளது.

எனவே இந்த சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டை தடுக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகிய அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று (அக்டோபர் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "வெள்ளூர் பகுதி கண்மாயில் தினம்தோறும் டாரஸ் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்காக பல ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான புகைப்படமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரரின் புகார் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details