திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வி.எம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரம்மநாயகம். இவர் நெல்லை தனியார் (ஐடிபிஐ) வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த 2019 ஜூன் 21ஆம் தேதியன்று டிடி மற்றும் பணம் டெபாசிட் செய்வதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த வங்கியில் சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை என்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாக அறியமுடிகிறது.
இதனையடுத்து, இது தொடர்பாக வங்கி மேலாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த வங்கி மேலாளர் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வங்கியில் சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஜூலை 12ஆம் தேதி அன்று மீண்டும் வங்கிக்கு அவர் சென்றபோதும், வங்கியில் தொடர்ந்து சென்ட்ரலைஸ் ஏசி வேலை செய்யவில்லை. வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்ற சிந்தனை சிறிதுமின்றி ஜன்னல் கதவுகளும் கூட அடைக்கப்பட்டு இருந்துள்ளன. நுகர்வோருக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை.
ஆனால், அலுவலர்களுக்கு மட்டும் மின்விசிறி ( Federal Fan) வைக்கப்பட்டு இருந்தது. வங்கியால் உளைச்சலுக்குள்ளான பிரம்மநாயகம், இது தொடர்பாக நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தேவதாஸ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரம்மநாயகத்தின் புகார் மனுவினை விசாரித்த நீதிமன்றம், வங்கி நுகர்வோருக்கு குறைபாடானா சேவை வழங்கியதோடு, முறையற்ற வாணிபம் புரிந்த வங்கியால் மன உளைச்சலுக்கு உள்ளான நுகர்வோருக்கு ஏற்பட்ட பிரம்மநாயகத்திற்கு இழப்பீடாக ரூபாய் 15 ஆயிரமும், வழக்கு செலவு ரூபாய் ஐந்து ஆயிரமும் சேர்த்து ரூபாய் 20 ஆயிரத்தை வழங்க வேண்டும். ஒருவேளை இந்த இழப்பீட்டுத் தொகையை ஒருமாத காலத்திற்குள் வழங்கத் தவறினால் ஆறு விழுக்காடு வட்டியுடன் சேர்த்து அத்தொகையை வழங்க உத்தரவு பிறப்பித்தது.