சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினரும், சாகித்ய விருது பெற்றவருமான எழுத்தாளர் சா. கந்தசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா. கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக எழுத்தைப் பயன்படுத்தியதால் மக்களின் நேசத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
எழுத்தாளர் சா. கந்தசாமிக்கு சொந்த ஊரில் நினைவேந்தல்! - மயிலாடுதுறை
நாகை: சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த ஊரான மயிலாடுதுறையில் நினைவேந்தல் நடைபெற்றது.
தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும், பல்வேறு மாநில மொழிப் படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் விளங்கிய சா. கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ், அறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.